டெல்லியில் இருந்து திரும்பிய 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் இருந்து திரும்பிய 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரணி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பலர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த பணி நடக்கிறது.
ஆரணி பகுதியில் இருந்து 11 பேர் டெல்லிக்கு சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரணி நகரில் 5 பேர், இரும்பேடு பகுதியில் 2 பேர், சந்தவாசலில் 3 நபர்கள், சின்னமங்கலம் கிராமத்தில் ஒருவர் என 11 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் நேற்று முன்தினம் இரவு செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டு வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆரணியை சுற்றி 7 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள ராட்டினமங்கலம், சேவூர், இரும்பேடு, எஸ்.வி.நகரம், நெசல் ஆகிய கிராமங்களிலும், ஆரணியில் உள்ள 13,400 வீடுகளிலும் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா என எஸ்.வி.நகரம், தச்சூர் ஆரம்பசுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர்கள் சுதா, மதன் ஆகியோர் தலைமையிலான 11 மருத்துவக்குழுவினர் வீடுவீடாக சென்று விசாரித்து வருகின்றனர்.
சந்தவாசல் பகுதியை சேர்ந்த 3 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கடந்த 24-ந் தேதி ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சந்தவாசல் அரசு மருத்துவர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் அருண், ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு ஆகியோர் அங்கு சென்று அவர்கள் 3 பேரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து 3 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 3 பேரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story