கொரோனா தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகள் உத்தரவை மீறிய வியாபாரிகள் மீது நடவடிக்கை - 7 தராசுகள் பறிமுதல்
நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிறப்பிக்கப்பட்ட அதிகாரிகளின் உத்தரவை மீறிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களிடம் இருந்து 7 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில்,
கொரோனா பரவலை தடுக்க நாகர்கோவிலில் சந்தைகளாக மாற்றப்பட்ட பகுதிகளில் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள், தங்களிடம் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க செய்ய வேண்டும். மக்களுக்கு வேண்டிய காய்கறிகளை வியாபாரிகள்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உருவாக் கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாகர்கோவில் மாநகராட்சி பொருட் காட்சி திடலில் செயல்பட்ட காய்கறி சந்தையில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையறிந்த மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது பொதுமக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்காமல் கும்பல், கும்பலாக நின்று காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் நகர்நல அதிகாரி கின்சால் ஒலிபெருக்கி மூலமாக பேசினார். அப்போது, சமூக விலகலை கடைபிடித்து பொதுமக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று காய்கறிகள் வாங்க வேண்டும் என்றும், வியாபாரிகள், மக்கள் கேட்கும் காய்கறிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதை பொருட்படுத்தாமல் மக்கள் தாங்களே காய்கறிகளை தேர்வு செய்து வாங்கியபடி இருந்தனர். சில வியாபாரிகளும் விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் அதிகாரிகளின் உத்தரவை மீறி வியாபாரம் செய்தனர். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவை மீறிய 7 வியாபாரிகளின் தராசுகள் மற்றும் எடைக்கல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அதிகாரிகளின் உத்தரவை மீறிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story