மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டெல்லியில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா பரிசோதனை


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டெல்லியில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 2 April 2020 3:45 AM IST (Updated: 2 April 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டெல்லியில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குத்தாலம்,

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியலை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என தமிழக சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

அந்த மாநாட்டில் பங்கேற்ற சிலரது பெயர், முகவரி சரியாக அரசுக்கு கிடைக்கவில்லை. இதனால் டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 13 பேர் தாங்களாக முன்வந்து சுகாதாரத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 13 பேரும் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாகை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன் கூறியதாவது:-

தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டெல்லியில் இருந்து வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்தால் தான் முடிவுகள் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் கேரளாவில் இருந்து மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்துக்கு வந்த ஒருவரையும் கண்டறிந்த சுகாதாரத்துறையினர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மேல்சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பொறையாறை சேர்ந்த ஒருவர், டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர், சொந்த ஊரான பொறையாறுக்கு வந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார மேற்பார்வையாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்தனர். பின்னர் அவரை, 108 ஆம்புலன்சு மூலம் நாகையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story