அவினாசியில் இருந்து அரியலூர் வழியாக குத்தாலத்திற்கு 400 கி.மீ. தூரம் நடந்து வரும் கட்டிட தொழிலாளர்கள்


அவினாசியில் இருந்து அரியலூர் வழியாக குத்தாலத்திற்கு 400 கி.மீ. தூரம் நடந்து வரும் கட்டிட தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 2 April 2020 3:15 AM IST (Updated: 2 April 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் இருந்து அரியலூர் வழியாக குத்தாலத்திற்கு 400 கி.மீ. தூரம் கட்டிட தொழிலாளர்கள் நடந்து வருகின்றனர்.

அரியலூர்,

நாகை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த 15 பேர், திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதிக்கு சென்று அங்குள்ள கிராமங்களில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் சார்பில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. மேலும் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தவர்கள், அவர்களை ஊருக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அவினாசி பகுதியில் ஒருநாள் தங்கியிருந்த 15 தொழிலாளர்களும் மறுநாள் தங்கள் ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.

ஆனால் வாகனங்கள் இயக்கப்படாததால், அவினாசியில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள குத்தாலத்திற்கு அவர்கள் நடந்தே செல்ல தீர்மானித்து அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் பெருந்துறை, ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, துறையூர், பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, வேலை பார்த்தபோது கிடைத்த சொற்ப கூலிப்பணத்தை கொண்டு, வரும் வழியில் உணவு சாப்பிட்டோம். வழியில் சிலர் எங்களுக்கு உணவு வழங்கினார்கள். எங்களுடன் வந்த வயதானவர்கள், உடல் சோர்வுற்றவர்கள் பகல் நேரத்தில் கோவில், சாலையோர மரநிழலில் ஓய்வு எடுக்கின்றனர். சில நேரம் அவர்களை, வழியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் ‘லிப்ட்‘ கேட்டு சிறிது தூரம் அனுப்பி வைப்பதும் உண்டு. வாலிபர்கள் தொடர்ந்து நடக்கிறோம். இதனால் 4 பேர், 5 பேர் என பகுதி, பகுதியாக செல்லும் நாங்கள், இரவில் ஒரு இடத்தில் தங்கிவிட்டு, மறுநாள் பயணத்தை தொடருகிறோம். முக்கால்வாசி தூரத்தை கடந்து விட்டோம். இன்னும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியது உள்ளது என்றனர்.

இதையடுத்து அவர்கள் அஸ்தினாபுரம், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், அணைக்கரை, திருப்பனந்தாள், பந்தநல்லூர் வழியாக குத்தாலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

Next Story