டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருச்சியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா அறிகுறி


டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருச்சியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா அறிகுறி
x
தினத்தந்தி 2 April 2020 10:20 AM IST (Updated: 2 April 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருச்சியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சி,

உலகெங்கும் மக்களை பீதியில் உறைய வைத்துள்ள கொரோனா வைரஸ் என்ற கொடூர தொற்று இந்தியாவில் தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டது. என்னதான் ஊரடங்கு உத்தரவு போட்டாலும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதை மீறி வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீன் என்ற இடத்தில் மத வழிபாட்டு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்படி கலந்து கொண்டவர்களில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1,500 பேர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி, புத்தாநத்தம், திருவெறும்பூர், இனாம்குளத்தூர், லால்குடி, துறையூர், கரட்டாம்பட்டி, தெற்கு ஈச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என கருதப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து சென்றவர்களில் இதுவரை 515 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்களில் திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டை சேர்ந்த 3 வாலிபர்கள், சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி, இனாம் சமயபுரம், ஈச்சம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த 11 பேர் உள்பட 107 பேர் திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையால் கண்டறியப்பட்டனர்.

இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 80 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 27 பேர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களில் 43 பேரின் சளி மற்றும் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் ஏற்கனவே 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற நபர்கள் மட்டும் கடந்த 2 நாட்களில் 107 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மொத்தம் 110 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை ஆய்வு அறிக்கையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவருபவர்கள் மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். திருச்சி மாவட்டத்தில் இருந்து, டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் அவர்களாகவே முன்வந்து 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story