கொரோனா வைரஸ் அறிகுறி? டெல்லியில் இருந்து சேலம் திரும்பிய 57 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - கலெக்டர் ராமன் பேட்டி
கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டெல்லியில் இருந்து சேலம் திரும்பிய 57 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வரும் 23 பேரின் உடல்நலம் குறித்து டீன் பாலாஜி நாதனிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து கலெக்டர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உள்ளாட்சித்துறை அமைப்புகள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் என அனைத்துத் துறை அலுவலர்களும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் முக்கியமாக, வெளிநாட்டில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என மாவட்டத்தில் 1420 பேர் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் கடந்த மாதம் நடந்த மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து 57 பேர் பங்கேற்றனர். இவர்கள் தற்போது ஊர் திரும்பி உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சேலம் மாநகரில் 10 பேர், ஆத்தூரில் 2 பேர், பிறபகுதிகளில் 45 பேர் என மொத்தம் 57 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா? என ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரேஷன் கடைகளில் ரூ.1,000 நாளை(இன்று)முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதற்கான டோக்கன் இன்று (நேற்று) வினியோகம் செய்யபட்டது. ஒரு நாளைக்கு காலை, மாலை என தலா 50 பேர் வீதம் 100 பேருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் சமூக இடைவெளி விட்டு வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவையொட்டி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கலெக்டருடன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நிர்மல்சன், நகர் நல அலுவலர் டாக்டர் பார்த்திபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story