டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய ஊத்தங்கரை வாலிபர் உள்பட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி


டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய ஊத்தங்கரை வாலிபர் உள்பட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 2 April 2020 10:21 AM IST (Updated: 2 April 2020 10:21 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய ஊத்தங்கரை வாலிபர் உள்பட 3 பேர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை,

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மகனூர்பட்டியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் திருப்பத்தூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அவர் நண்பர்களுடன் டெல்லியில் நடந்த முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கடந்த 24-ந் தேதி தனது சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் அவர், பெங்களூரூவை சேர்ந்த நண்பருடன் சேர்ந்து ஊரில் சுற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி மாநாடு சென்று திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருக்கும் தகவலை கிராம மக்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஊத்தங்கரை வாலிபர் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் சிங்காரப்பேட்டை போலீசார் அங்கு சென்று அந்த வாலிபர், அவரது தாயார் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவிலேயே அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என தெரியவரும்.

Next Story