பெரம்பலூர் மாவட்டத்தில், வெளிநாடு-மாநிலங்களில் இருந்து வந்த 1,835 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - கலெக்டர் தகவல்


பெரம்பலூர் மாவட்டத்தில், வெளிநாடு-மாநிலங்களில் இருந்து வந்த 1,835 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 April 2020 10:31 AM IST (Updated: 2 April 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,835 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசுகையில், 

பொதுமக்களுக்கு தேவையான மளிகைப்பொருட்களை அவர்களின் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,835 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. 36 ஆதரவற்ற நபர்கள், 768 வெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் 10 எண்ணிக்கையில் சிறப்பு வார்டுகளும், 540 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்ற நிலை தொடர அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story