திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அலைக்கழிப்பு: மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் கடைகள் அமைக்க திரண்டதால் பரபரப்பு


திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அலைக்கழிப்பு: மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் கடைகள் அமைக்க திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 April 2020 10:58 AM IST (Updated: 2 April 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அலைக்கழிக்கப்பட்டனர். அவர்கள் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் கடைகள் அமைக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த 30-ந் தேதி மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை நிரந்தரமாக மூட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டார். மேலும் காந்தி மார்க்கெட்டுக்குள் எந்த வாகனத்தையும் அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. மார்க்கெட்டின் 6 வாசல்களும் மூடப்பட்டன.

அதைத்தொடர்ந்து 31-ந் தேதியன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகில் பைபாஸ் சாலை பாலத்தின் கீழ் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் காய்கறி விற்பனையை தொடங்கினர். ஒருநாள் இரவு மட்டுமே வியாபாரம் நடந்த நிலையில் நேற்று மாலை அரியமங்கலத்தில் மீண்டும் வியாபாரத்திற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

மாற்று இடமாக மன்னார்புரம் ரவுண்டானா அருகில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் வியாபாரம் செய்யக்கூறி துரத்தப்பட்டனர். எனவே, வெளியூர்களில் இருந்து வந்த காய்கறி சரக்கு லாரிகள் அனைத்தையும் ராணுவ மைதானம் நோக்கி கொண்டு செல்ல வியாபாரிகள் பணித்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மன்னார்புரம் ராணுவ மைதானம் கொண்டு வரப்பட்டு, அங்கு மின்விளக்குகள் அமைத்து அனைவரும் வியாபாரத்திற்கு ஆயத்தமானார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, அரசு ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு மொத்த வியாபாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கலெக்டர் பங்களாவில் புகார் கொடுக்க சென்றனர். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள்.

அதனால், எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதா? என்று முறையிட்டனர். போலீசாரின் அலைக்கழிப்பால் மொத்த வியாபாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மேலும் வியாபாரிகளிடையே சலசலப்பும் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் விடை தெரியாமல் மீண்டும் அரியமங்கலம் பழைய பால்பண்ணை நோக்கி லாரிகளுடன் புறப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு கூறியதாவது:-

எங்களை தற்காலிகமாக ஓரிடத்தில் வியாபாரம் செய்யவிடாமல் மாவட்ட நிர்வாகமும் போலீசும் அலைக்கழித்து வருகிறார்கள். எனவே நாளை (அதாவது இன்று) காலை காந்தி மார்க்கெட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒருங்கிணைந்த கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் கொரோனா முடியும் வரை மொத்த வியாபாரிகள் வியாபாரம் செய்வதா? வேண்டாமா? என்று முடிவெடுக்கும் சூழல் ஏற்படலாம். வியாபாரிகள் அனைவரும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story