டெல்லி சென்று கடலூர் திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பா? குடியிருப்பு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
டெல்லி சென்று கடலூர் திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இருந்த குடியிருப்பு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
விருத்தாசலம்,
டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 28 பேர் கடலூருக்கு திரும்பி வந்தனர். இதில் விருத்தாசலம் தாஷ்கண்ட் நகர், பாத்திமா காலனி, அப்துல் கலாம் ஆசாத் தெரு, ஆலடி சாலை, வீரபாண்டியன் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் டெல்லிக்கு சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி தலைமையிலான மருத்துவ குழுவினர், நகராட்சி ஆணையாளர் பாண்டு தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையிலான போலீசார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் நேற்று விருத்தாசலம் தாஷ்கண்ட் நகர், பாத்திமா காலனி, அப்துல் கலாம் ஆசாத் தெரு, ஆலடி சாலை, வீரபாண்டியன் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியேற முடியாத வகையிலும், உள்ளே யாரும் செல்ல முடியாத வகையிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று வீடுகளில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை, வலி உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? என கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமார் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டைவிட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதேபோல் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 16, 21, 22 ஆகிய வார்டுகளை சேர்ந்த 3 பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் சப்-கலெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்ட 3 வார்டுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 3 வார்டுகளில் இருந்து சென்ற 3 நபர்களின் வீடுகள் முழுவதும் கிருமிநாசினி மற்றும் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி 3 வார்டுகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவக்குழுவினர் வீடு வீடாக சென்று யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கிறதா? என்பதனை அந்த பகுதியில் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து 16, 21, 22 ஆகிய வார்டுகளில் தெரு முகப்பில் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் பேரிகார்டுகள் வைத்து தனிமைப்படுத்தப்பட்டன.
மேலும் மருத்துவக்குழுவினர் சுற்றுப்புற பகுதிகளில் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி கமிஷனர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஷாஜகான், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஜீவா நகர் முதல் தெருவில் ஒரு வீட்டுக்கு சிலர் மும்பையில் இருந்து வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போது மும்பையில் இருந்து உங்கள் வீட்டுக்கு யாரும் வந்து உள்ளார்களா? என போலீசார் கேட்டனர். ஆனால் அதற்கு சரியான முறையில் வீட்டு உரிமையாளர் பதில் கூறவில்லை. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த அனைத்து நபர்களின் அடையாள அட்டையை உடனடியாக கொண்டு வருமாறு தெரிவித்தனர். அப்போது 2 பேர் மும்பையில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவக்குழுவினரை வரவழைத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர். மேலும் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரக்கூடாது என கூறி எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
டெல்லி சென்று திரும்பிய சிதம்பரம் கோட்டையன் தெருவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடைய வீடும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதைத்தொடர்ந்து கோட்டையன் சந்து, தொப்பையன் தெரு, வாணகார தெரு, காமராஜர் நகர், அப்பாபிள்ளை சந்து, தாகம் தீர்த்த பிள்ளையார் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, விஸ்வநாதன் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி சென்று திரும்பிய பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான், பரங்கிப் பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் தெருக்கள் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அந்தந்த பகுதிகளில் மருத்துவக்குழுவினர், வீடு, வீடாக சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். அப்பகுதிகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story