காய்கறி, மளிகை பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை


காய்கறி, மளிகை பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 April 2020 11:00 PM GMT (Updated: 2 April 2020 5:24 PM GMT)

காய்கறி, மளிகை பொருட் களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.

கயத்தாறு, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பஸ் நிலைய வளாகம் நேற்று வாரச்சந்தையாக செயல்பட்டது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் கயத்தாறு நகர பஞ்சாயத்து அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜோதிபாசு, யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தினமும் அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி, தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

நாட்டு மக்களின் நலன் காக்க அனைவரும் சுயஊரடங்கை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா வைரசை ஒழிக்க, மருத்துவ ரீதியாக ஒரே தீர்வு தனிமைப்படுத்துதல்தான். எனவே, கொரோனா வைரசால் ஒருவர் கூட உயிரிழந்து விடக்கூடாது என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுய ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுவதுடன், இந்த மாதத்துக்கான (ஏப்ரல்) அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, அதில் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் ரேஷன் கடைகளில் வந்து உதவித்தொகை, உணவுப்பொருட்களை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்து 52 கிராமங்களும், 500-க்கும் மேற்பட்ட நகர பஞ்சாயத்துகளும், 124 நகராட்சிகளும், 12 மாநகராட்சிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி வருகிறோம்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளுக்காக தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், திரைப்பட வர்த்தக சபை, பெப்சி போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிவாரண நிதி திரட்டி வருகின்றனர். கலை உலகை சேர்ந்தவர்கள், எப்போதும் யார் பாதிக்கப்பட்டாலும் முதல் ஆளாக வந்து உதவி செய்யக்கூடிய நிலையில் உள்ளனர். அவசரகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மட்டும் தற்போது செய்து வருகிறோம். அனைத்தும் சகஜ நிலைக்கு வந்த பின்னர் திரையரங்குகளில் ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிப்போம்.

காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வினியோகம் செய்வதற்கு அறிவுறுத்தி வருகிறோம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. காய்கறி, மளிகை பொருட்களை பதுக்கிறவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்.

பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகள் வாங்கும் வகையில், பஸ் நிலையங்களை சந்தைகளாக மாற்றி வருகிறோம். மேலும் தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற நகரங்களில் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்க 2 அல்லது 3 இடங்களில் காய்கறி சந்தைகளை நடத்தி வருகிறோம். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Next Story