குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 2 April 2020 9:30 PM GMT (Updated: 2 April 2020 7:13 PM GMT)

சிவகங்கை மற்றும் மானாமதுரையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை, 

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு சார்பில் நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கையை அடுத்த சாலூர் கிராமத்தில் நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு நிவாரண தொகையை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசமாகவும், ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 625 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த பொருட்களை பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் வந்து வாங்கி செல்லும் வகையில் டோக்கன் கொடுத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் பழனீஸ்வரி, சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் நாச்சம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மானாமதுரை அருகே கொன்னக்குளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். இதில் கலெக்டர் ஜெயகாந்தன், மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன், கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ராசாத்தி பெரியசாமிராஜா, ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story