பாவூர்சத்திரத்தில் ரேஷன் கடை, காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு
பாவூர்சத்திரத்தில் ரேஷன் கடைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்.
பாவூர்சத்திரம்,
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கல்லூரணி பஞ்சாயத்து மற்றும் குலசேகரபட்டி பஞ்சாயத்துக்கு தனித்தனி ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளபடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடைகளில் மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அத்துடன் அங்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் பொருட்களின் எடை மற்றும் விவரங்களை கேட்டறிந்தார். அங்கு இருப்பில் உள்ள பொருட்களை பார்வையிட்டார். மேலும் பொருட்கள் மற்றும் உதவித்தொகை வாங்க வரும் பொதுமக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படாத வகையில் சமூக இடைவெளி அமைக்க வேண்டும் என்றும், கடையை சுற்றிலும் பிளச்சிங் பவுடர் தினமும் போட வேண்டும், வருகின்ற பொதுமக்களுக்கு கைகழுவ சோப்பு மற்றும் தண்ணீர் வசதி செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
காய்கறி மார்க்கெட்
பின்னர் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளையும், காய்கறிகளை வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். அத்துடன் கடை உரிமையாளர்களிடம் வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கினார். அத்துடன் மார்க்கெட்டிற்கு வரும் அனைத்து நபர்களுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அனைத்து கடைகள் முன்பும் பிளச்சிங் பவுடர் போட வேண்டும், கிருமிநாசினி தினமும் தெளிக்க வேண்டும், அத்துடன் கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வைக்க வேண்டும் என்றும் எடுத்துக்கூறினார். மேலும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது யூனியன் கூடுதல் ஆய்வாளர் ராதா, கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story