கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: நெல்லை மேலப்பாளையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு - ஊர் எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு


கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: நெல்லை மேலப்பாளையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு - ஊர் எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 3 April 2020 4:45 AM IST (Updated: 3 April 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நெல்லை மேலப்பாளையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊர் எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை மேலப்பாளையம் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் வருவதால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டில் மேலப்பாளையத்தை சேர்ந்த 16 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா வார்டில் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை அங்குள்ள தனிமை வார்டில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த 16 பேரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள ஒரு கல்லூரியில் தனிமையில் தங்குவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் சுகாதார பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்தார். இதையடுத்து ஊருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. தெற்கு புறவழிச்சாலையில் இருந்து அம்பை செல்லும் சாலை இரும்பு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. அதேபோல் மேலப்பாளையம் குறிச்சி சாலை, கருங்குளம் சாலை, டவுன் சாலை ஆகியவையும் மூடப்பட்டன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊர் எல்லையை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலப்பாளையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் உள்ளது.

நெல்லை பேட்டையை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதி மூடப்பட்டு உள்ளது. அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோடீஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தார்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story