3.65 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் சுமார் 3.65 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் பொதுமக்கள் நலனுக்காக அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.1,000 மற்றும் இம்மாதத்திற்கான அரிசி, சீனி, கோதுமை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் மொத்தம் 775 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 874 அரிசி ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசால் ரூ.36 கோடியே 48 லட்சத்து 74 ஆயிரம் நிதி விடுவிக்கப்பட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை 10 நாட்களுக்குள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்கும் விதமாக 10 முதல் 15 ரேஷன்கடைகளுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டும், துணை ஆட்சியர் நிலையில் வட்டார அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரேஷன்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்திட ஏதுவாக முன்னதாகவே ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் பொதுமக்கள் அவ்வப்போது தங்களது கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை கொண்டு சுத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பரமக்குடி நகராட்சி எமனேசுவரம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story