தோட்டக்கலைத்துறை சார்பில் 20 காய்கறி அடங்கிய தொகுப்பு - சென்னைவாசிகளிடம் அமோக வரவேற்பு


தோட்டக்கலைத்துறை சார்பில் 20 காய்கறி அடங்கிய தொகுப்பு - சென்னைவாசிகளிடம் அமோக வரவேற்பு
x
தினத்தந்தி 3 April 2020 4:15 AM IST (Updated: 3 April 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் வெளியே வருவதை கணிசமாக குறைக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் 20 காய்கறி அடங் கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டன. இது பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட் களை வாங்குவதற்கு, சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் சந்தைகளிலும், கடைகளிலும் முந்தியடித்து வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்தால் மட்டுமே, கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டமுடியும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையிலும், காய்கறி வாங்குவதற்கு அடிக்கடி வெளியே வருவதை கணிசமாக குறைக்கும் வகையிலும் வேளாண்துறை அமைச் சர் துரைக்கண்ணு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, வேளாண்துறை அரசு முதன்மைச்செயலாளர் ககன்தீப்சிங்பேடி உத்தரவின்பேரில், தோட் டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டான்ஹோடா) விற்பனை மையம் காய்கறி தொகுப்பு என்ற புது முயற்சியை கையில் எடுத்துள்ளது.

அதாவது, ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 5 நாட்கள் சமைப்பதற்கு தேவைப்படும் கத்திரிக்காய், வெண்டைக்காய், பல்லாரி வெங்காயம், சாம்பார் வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், முள்ளங்கி உள்பட 20 வகையான காய்கறிகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒரு பையும் வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பை ஒரு குடும்பத்தினர் வாங்கினால் 5 நாட்களுக்கு, காய்கறி வாங்க வெளியே வரவேண்டிய அவசியம் இருக்காது. இந்த காய்கறி தொகுப்பின் விலை ரூ.200 ஆகும்.

இந்த காய்கறி தொகுப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே, வடபழனியில் உள்ள தோஷிபா அடுக்குமாடி குடியிருப்பு அருகே, மாதவரம் தோட்டக்கலைத்துறை அலுவலகம் அருகே மற்றும் திருவான்மியூர் முத்துலெட்சுமி பூங்கா அருகே என 4 இடங்களில் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இந்த காய்கறி தொகுப்புக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு காணப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று 20 வகையான காய்கறி தொகுப்பினை வாங்கிச் சென்றார்கள்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் தடை உத்தரவு காரணமாக சந்தைப்படுத்த முடியாமல் போய்விடக்கூடாது. அதே சமயத்தில் விவசாயிக்கும் அந்த பயிருக்கு ஏற்ற தொகை கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், பொதுமக்கள் அடிக்கடி வெளியே வந்து காய்கறி வாங்குவதை குறைக்கும் வகையிலும் இந்த முறையை அமல்படுத்தியிருக் கிறோம் என்றனர்.

Next Story