பள்ளி வாசலில் தங்கி இருந்த 2 பேருக்கு கொரோனா: கோவில்வெண்ணி கிராமத்துக்கு ‘சீல்’


பள்ளி வாசலில் தங்கி இருந்த 2 பேருக்கு கொரோனா: கோவில்வெண்ணி கிராமத்துக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 2 April 2020 10:00 PM GMT (Updated: 3 April 2020 4:15 AM GMT)

பள்ளி வாசலில் தங்கி இருந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவில்வெண்ணி கிராமத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

மியான்மர் நாட்டில் இருந்து மத பிரசாரத்துக்காக வந்த முஸ்லிம்கள் 13 பேர் திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் தங்கி இருந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவர்களால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இவர்களில் 7 பேரின் ரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளி நாட்டை சேர்ந்த முஸ்லிம்களுக்கு கொரோனா தொற்று இருந்ததாக தகவல் பரவியது. இந்த மாநாட்டில் கோவில்வெண்ணியை சேர்ந்த ஒருவரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் மியான்மரை சேர்ந்தவர்களுடன் பள்ளிவாசலில் தங்கி இருந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த கோவில்வெண்ணி கிராம மக்கள் பள்ளிவாசலில் வெளிநாட்டவர்கள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிவாசலுக்கு சென்று மியான்மரை சேர்ந்த 13 பேர் மற்றும் அவர்களுடன் தங்கி இருந்த 5 பேர் உள்பட 18 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் மியான்மரை சேர்ந்த ஒருவர், கோவில்வெண்ணியை சேர்ந்த ஒருவர் என 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவில்வெண்ணி பள்ளிவாசலில் தங்கி இருந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கிராமத்துக்கு வெளி ஆட்கள் வருவதையும், கிராம மக்கள் வெளியே செல்வதையும் தடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி, தீயணைப்புத்துறை அலுவலர்(பொறுப்பு) பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கோவில்வெண்ணி கிராமத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கோவில்வெண்ணியின் பிரதான சாலை மற்றும் கிராமத்தின் எல்லை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. கோவில்வெண்ணி கிராமத்தை சேர்ந்தவர்கள் கிராமத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது. பிற ஊர்களில் இருந்து யாரும் கோவில்வெண்ணிக்கு வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில்வெண்ணி கிராமத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கிராம பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story