வேலூர் அருகே, துப்பாக்கியால் சுட்டு தப்பிய சாராய கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள் - தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை


வேலூர் அருகே, துப்பாக்கியால் சுட்டு தப்பிய சாராய கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள் - தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 3 April 2020 4:30 AM IST (Updated: 3 April 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சாராய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மலைப்பகுதியில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

வேலூர்,

வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் கும்பலாக சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். இதனால் அந்த மலைப்பகுதிக்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்கள் பலர் சாராயம் குடிக்க சென்று வந்தனர். அதிக அளவிலான மதுபிரியர்கள் அங்கு சென்று வருவதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக புலிமேடு பகுதி கிராம மக்கள் கருதினர். இதனால் அந்த மலைப்பகுதியில் சாராயம் விற்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சாராயம் விற்கும் இடத்துக்கு சென்று ஏன் இங்கு சாராயம் விற்கிறீர்கள்? என தட்டிக் கேட்டனர்.

ஆத்திரம் அடைந்த சாராய கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தட்டிக் கேட்டவர்களை நோக்கி சுட்டதில் பூபாலன் (வயது 30), சங்கர் (23), அண்ணாமலை (18) ஆகியோர் குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அது குறித்து போலீசார் கூறியதாவது:-

புலிமேடு அருகே மலைப்பகுதி உள்ளது. அங்கு அல்லேரி உள்பட சுமார் 7 குக்கிராமங்கள் உள்ளன. 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள கிராமங்களில் உள்ளவர்களில் சிலருக்கு சாராயம் காய்ச்சுவதே தொழிலாக இருந்துள்ளது. அவர்கள் மலைப்பகுதியில் ரகசியமாக சாராயம் காய்ச்சி பல்வேறு இடங்களில் சாராய விற்பனை செய்து வந்துள்ளனர். தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சாராய விற்பனை களைகட்டியது. நீண்டவரிசையில் மதுபிரியர்களை நிற்க வைத்து சாராய விற்பனை செய்யப்பட்டுள்ளது. சாராய கும்பலிடம் நாட்டுத்துப்பாக்கிகள் சகஜமாக புழக்கத்தில் உள்ளது. அவர்கள் அதை வைத்து பறவைகள் சில விலங்குகளையும் ரகசியமாக வேட்டையாடியதாக கூறப்படுகிறது.

சாராய விற்பனையில் அதிக பணம் வந்ததால் அதை தடுக்க நினைப்பவர்களை கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் துணிந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவையொட்டி போக்குவரத்து தற்போது இல்லாததாலும், பல்வேறு இடங்களில் போலீசார் சாலைகளை முடக்கி சோதனை பணியில் ஈடுபடுவதாலும் குற்றவாளிகள் மலைப்பகுதியில் பதுங்கி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story