144 தடை உத்தரவு முடியும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தல்
கொரோனா பரவுவதை தடுக்க திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு முடியும் வரை பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
ஜோலார்பேட்டை,
தமிழகத்தில் கொனோரோ வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை காலத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்கும் விதமாக ஆயிரம் ரூபாயுடன் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை விலை இல்லாமல் வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அவர்கள் நேற்று ஜொலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சோலையூர், கோடியூர், ஊசிநாட்டான் கிராமம் ஆகிய ஊர்களில் பொதுமக்களுக்கு ரேஷன்கடைகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதை பார்வையிட்டனர். பின்னர் சிலருக்கு ஆயிரம் ரூபாயை நேரடியாக வழங்கி துண்டுப்பிரசுரங்களையும் கொடுத்து அரசு அறிவித்துள்ள தடை உத்தரவை அனைவரும் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டனர்.
அப்போது கலெக்டர் சிவன்அருள் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 547 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 756 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ரேஷன்கடையிலும் தினமும் 50 பேருக்கு ரூ.1000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும். இந்த பணிகள் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.பி. சீனிவாசன் உட்பட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தாலுகா பகுதிகளில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1,108 பேர் வந்துள்ளனர். இதேபோல் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேர் வந்துள்ளனர். இவர்களில் ஆம்பூரை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம் இன்னும் கிடைக்கவில்லை. 144 தடை உத்தரவு முடியும் வரை திருப்பத்தூர் மாவட்ட மக்கள் யாரும் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story