திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரண தொகை ரூ.1000, ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடக்கம் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு


திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரண தொகை ரூ.1000, ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடக்கம் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2020 10:15 PM GMT (Updated: 3 April 2020 4:15 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரண தொகை ரூ.1,000, விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.1,000 மற்றும் விலையில்லா பொருட்கள் வீடு, வீடாக நேரில் சென்று வழங்கும் பணி தொடங்கியது.

வேங்கிக்கால் நியாய விலை கடையில் குடும்ப அட்டைகளுக்கு நிவாரண தொகை மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் காமாட்சி, துணை பதிவாளர்கள் சரவணன், ஆரோக்கியசாமி, மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குனர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி, நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குனர் விஜயகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் நிவாரண தொகை ரூ.1,000 மற்றும் விலையில்லா அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் ஆகியவை வீடு, வீடாக சென்று வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் போது முக கவசம் அணிந்துவர வேண்டும். சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்றார். 

Next Story