குடும்ப அட்டைதாரர்களை நாற்காலியில் அமரவைத்து நிவாரணத்தொகை-பொருட்கள் வினியோகம்
குடும்ப அட்டைதாரர்களை நாற்காலியில் அமரவைத்து நிவாரணத்தொகை மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
புதுக்கோட்டை,
கொரோனா வைரசின் பாதிப்பு தமிழகத்திலும் தலைகாட்ட தொடங்கி உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 14-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் நேற்று முதல் வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 995 கூட்டுறவு அங்காடிகள் மற்றும் 3 இலங்கை அகதிகள் கூட்டுறவு அங்காடிகள், 4 மகளிர் அங்காடிகள் என மொத்தம் 1,002 கூட்டுறவு அங்காடிகள் உள்ளது.
இந்த அங்காடிகளில் பணியாளர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நேற்று 605 கூட்டுறவு அங்காடிகளில் அங்காடிக்கு தலா 100 பேர் வீதம் 60 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் ஒவ்வொரு அங்காடிகளிலும் சமூக இடைவெளி விட்டு குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு ஊராக வரவழைக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதிகளில் உள்ள சிறப்பு கூட்டுறவு அங்காடியில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக குடும்ப அட்டைதாரர்களை சமூக இடைவெளிவிட்டு நாற்காலியில் அமரவைத்து ஒவ்வொருவராக வரவழைத்து நிவாரணத்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நோய்த்தொற்றை தவிர்க்கலாம். பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடாமல் அவர்களுக்கு பாதுகாப்போடு நிவாரண பொருட்களை வழங்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறந்தாங்கி அருகே நாகுடி ரேஷன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத் தொகை நேற்று வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல் விஜயபுரம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்று நிவாரணத்தொகை, பொருட்களை வாங்கி சென்றனர்.
பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் அயோத்திராஜா வழங்கினார்.
அண்டக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை கூட்டுறவு சங்க தலைவர் முகமது மைதீன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவீரமணி ஆகியோர் வழங்கினர். அரிமளம் ஒன்றியம், ஓணாங்குடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரூ.1,000 நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் வழங்கினார்.
இதேபோல் திருவரங்குளம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
திருமயம் அருகே குழிபிறை ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களை சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமர வைத்து முக கவசம் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரூ.1,000 நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை ஊராட்சி ஒன்றிய தலைவர் ராமு வழங்கினார்.
விராலிமலை தாலுகா அக்கல்நாயக்கன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத் தொகையை விராலிமலை வட்ட வழங்கல் அலுவலர் உமா மகேஸ்வரி வழங்கினார். மேப்பூதகுடி கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவள்ளி வழங்கினார்.
Related Tags :
Next Story