டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு: மதுபாட்டில்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் - கண்காணிப்பு கேமரா பொருத்தி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு நடந்ததால், அங்கிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டன. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.
பல இடங்களில் முன்கூட்டியே வாங்கி வைத்த மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி வரகனேரி, உறையூர் கோணகரைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடைகளில் பூட்டை உடைத்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
இதனால் பாதுகாப்பற்ற இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து, திருச்சி மாநகரில் 10 டாஸ்மாக் கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 54 கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி தேவர் ஹாலுக்கு எடுத்துவரப்பட்டன.
அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் தீத்தடுப்பு கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story