டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 5 பேர் மருத்துவமனையில் அனுமதி: பழனி பகுதியில் 4 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் எதிரொலியாக பழனி பகுதியில் 4 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
பழனி,
டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தமிழகம் திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அதன்படி டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு பழனியை சேர்ந்த 2 பேர், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த 2 பேர், பாலசமுத்திரத்தை சேர்ந்த ஒருவர் என 5 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
இந்தநிலையில் அந்த 5 பேர் வசித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அங்குள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்தனர்.
அந்த வகையில் பழனி மற்றும் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து விவரங்களை சேகரித்தனர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர் வகாப் ஆகியோர் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தகவல்களை சேகரித்தனர். இதில் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. எனினும் இந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுபோல நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த 2 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்று இருந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின்போது கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் ஊரைவிட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வர கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் ஊருக்குள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story