டெல்லி மாநாட்டில் பங்கேற்று விழுப்புரம் திரும்பிய 55 பேர் கொரோனா வார்டில் அனுமதி


டெல்லி மாநாட்டில் பங்கேற்று விழுப்புரம் திரும்பிய 55 பேர் கொரோனா வார்டில் அனுமதி
x
தினத்தந்தி 3 April 2020 11:40 AM IST (Updated: 3 April 2020 11:40 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநாட்டில் பங்கேற்று விழுப்புரம் திரும்பிய 55 பேர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை டெல்லி நிஜாமுதீனில் நடந்த முஸ்லிம்கள் மாநாட்டிற்கு சென்று விட்டு விழுப்புரம் திரும்பியுள்ள நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை தவிர விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 64 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று அவரவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 55 பேர் சுகாதாரத்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 பேர் தற்போது விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், 30 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 55 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வரவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி சென்று விட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு திரும்பியுள்ளவர்களில் 9 பேர் எங்கே இருக்கிறார்கள் என்றும் அவர்களை பற்றி எந்தவொரு தகவலும் தெரியாத நிலை உள்ளது. அவர்கள் தங்களால் இந்த கொரோனா தொற்று யாருக்கும் பரவாமல் இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் தாமாகவே முன்வந்து அரசு மருத்துவமனையில் சேர்ந்து தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் 9 பேரும் இன்னும் மருத்துவமனைக்கு வராமல் உள்ளனர். எனவே அவர்களை கண்டறிந்து மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்ய வைப்பதற்காக சுகாதாரத் துறையினர் மூலம் போலீசார், அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story