தங்க நாணய பரிசு திட்டத்துடன் அறிமுகம்: 27 வகை மளிகை பொருட்களுடன் ரூ.2 ஆயிரத்துக்கு ‘தொகுப்பு பை’ - வீடு தேடி வரும் இந்த முயற்சிக்கு ஒரே நாளில் ஆயிரம் பேர் முன்பதிவு
தேனியில் தங்க நாணய பரிசு திட்டத்துடன், ரூ.2 ஆயிரத்துக்கு 27 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வீடுதேடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு ஒரே நாளில் ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தேனி,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேனி உழவர் சந்தை, தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்தையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், தேனி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடுதேடி சென்று மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.150-க்கு 18 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையையும் மக்களுக்கு அவர் வழங்கினார்.
வீடுதேடி வழங்கப்படும் மளிகை தொகுப்பு பையில் 27 வகையான மளிகை பொருட்கள் மற்றும் மக்கள் விரும்பும் வேறு சில அத்தியாவசிய பொருட்களும் இடம் பெறும். இதன் மதிப்பு தோராயமாக ரூ.2 ஆயிரம் ஆகும். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி, 75488 57532, 95853 50940, 94876 44135 ஆகிய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் வீட்டின் முகவரி மற்றும் தேவையான பொருட்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்த மறுநாள் மக்களின் வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்கப்படும்.
ரூ.2 ஆயிரத்துக்கு குறைவாக பொருட்கள் வாங்கினாலும், வீடு தேடி சென்று வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் ரூ.2 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு பரிசு கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை பூர்த்தி செய்து அளித்தால், இந்த மாதம் இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக 1 பவுன், 2-வது பரிசாக ½ பவுன், 3-வது பரிசாக ¼ பவுன் என தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாக குலுக்கல் நடத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தேனி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்று அங்கு காலை உணவு சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், போடியில் உள்ள அம்மா உணவகத்துக்கும் அவர் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story