ஊரடங்கால் ஏற்றுமதி பாதிப்பு: பன்னீர் திராட்சை விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் பரிதாபம்


ஊரடங்கால் ஏற்றுமதி பாதிப்பு: பன்னீர் திராட்சை விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் பரிதாபம்
x
தினத்தந்தி 3 April 2020 6:10 AM GMT (Updated: 3 April 2020 6:10 AM GMT)

ஊரடங்கையொட்டி வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பன்னீர் திராட்சை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, ஏ.வெள்ளோடு, செட்டியப்பட்டி, காமலாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பன்னீர் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்னீர் திராட்சை அறுவடை தொடங்கி மதுரை, திருச்சி, சென்னை உள்பட வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பிற மாநிலங்களுக்கும் திண்டுக்கல்லில் இருந்து பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்காக ரெயில்கள், சரக்கு லாரிகள் மூலம் திராட்சை கொண்டு செல்லப்பட்டது. அந்த வகையில் தினமும் 50 டன் அளவுக்கு திராட்சை ஏற்றுமதி நடைபெற்றது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரெயில்கள், லாரிகள், பஸ்கள் என அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பன்னீர் திராட்சை ஏற்றுமதி முழுமையாக நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளியூர் வியாபாரிகளும் பன்னீர் திராட்சை வாங்க முன்வரவில்லை. அதேநேரம் அறுவடைக்கு தயாரான திராட்சைகள், கொடிகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேறுவழியின்றி திராட்சையை அறுவடை செய்து வருகின்றனர்.

ஆனால் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு பன்னீர் திராட்சை முழுமையாக ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், விவசாயிகள் உள்ளூரிலேயே விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பன்னீர் திராட்சையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்பனையான பன்னீர் திராட்சை தற்போது ரூ.30-க்கு தான் விற்பனை ஆகிறது.

இதனால் பன்னீர் திராட்சை பயிரிட்ட விவசாயிகள், நஷ்டமடைந்து கண்ணீர் வடிக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பன்னீர் திராட்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story