கொரோனா எதிரொலி: ஊர் எல்லையை மூடிய கிராமத்து மக்கள்
கொரோனா எதிரொலியாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் ஊர் எல்லையை மூடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கிராமத்து மக்கள் தங்களை, தாங்களே காத்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லிக்குப்பம் அருகே உள்ள வரக்கால்பட்டு ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், ஊரின் நுழைவு பகுதியில் கம்புகள் மூலம் தடுப்பு வேலி அமைத்து பாதையை அடைத்துள்ளனர். இது தொடர்பாக அங்கு விளம்பர பதாகை ஒன்றையும் வைத்துள்ளனர்.
கிராமத்துக்குள், அரசு அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வெளி நபர்கள், வெளியூரை சேர்ந்தவர்களுக்கு ஊருக்குள் வர அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். தடுப்பு வேலியை மீறி யாரும் கிராமத்துக்குள் நுழையாமல் இருக்க அப்பகுதி இளைஞர்களே அங்கு காவலுக்கு அமர்ந்து இருக்கிறார்கள்.
இதேபோல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் விசலூர் ஊராட்சியின் நுழைவு பகுதியில், சாலையின் குறுக்கே கிராம மக்கள் தடுப்பு அமைத்துள்ளனர். வெளியூரை சேர்ந்தவர்கள் கிராமத்துக்குள் நுழையாத வகையில் கண்காணித்தும் வருகின்றனர். மேலும் கிராமத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று ஊராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் புதுப்பேட்டை அருகே பைத்தாம்பாடி கிராமத்தில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் சாலை உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பைத்தாம்பாடி சத்திரம் ரோட்டில் வெளி நபர்கள் உள்ளே வருவதை தடுக்கும் வகையில் கிராம மக்கள் ஒன்றுகூடி சாலையில் தடுப்பு அமைத்து எல்லையை மூடினர். மேலும் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். அப்போது கிராம மக்கள் கையில் வேப்பிலையுடன் வெளி நபர்களை ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டு, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story