கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
x
தினத்தந்தி 3 April 2020 7:44 AM GMT (Updated: 3 April 2020 7:44 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி காந்திரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கடை எண்-1, மற்றும் கடை-2, ஆகிய ரேஷன்கடைகளில், நேற்று முதல் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணத்தொகை ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1,000, அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 485 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,094 ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.1000 வீதம் ரூ.50 கோடியே 4 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், அரிசி 10 ஆயிரத்து 19 டன், சர்க்கரை 766 டன், கோதுமை 490 டன், பருப்பு 393 டன், பாமாயில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 570 பாக்கெட் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த பணிகள் வருகிற 14-ந்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 80 டோக்கன் முதல் 100 டோக்கன் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே வீடுகள் தோறும் டோக்கன் வழங்கி தேதியும் வழங்கப்பட்டுள்ளது. அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேதியில் நிவாரண பொருட்கள் பெற்றுகொள்ளலாம்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை விவரத்தினை பணியாளர்கள் மூலமாக ஒலிபெருக்கி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அன்றைய தேதியில் நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சந்தானம், துணை பதிவாளர்கள் ராஜதுரை, சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் குருநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story