கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தர்மபுரியை சேர்ந்தவருக்கு டெல்லியில் சிகிச்சை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தர்மபுரியை சேர்ந்தவருக்கு டெல்லியில் சிகிச்சை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 3 April 2020 1:14 PM IST (Updated: 3 April 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள தர்மபுரியை சேர்ந்த ஒருவருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.பிஅன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் நிவாரணமாக ரூ.1,000 மற்றும் குடிமைப்பொருட்கள் வழங்கும் பணி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளில் நேற்று தொடங்கியது. வெண்ணாம்பட்டி ரேஷன்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,061 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் மொத்தம் 4,28,020 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.1,000 வீதம் ரூ.42 கோடியே 80 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. ஒரு ரேஷன்கடையில் ஒரு நாளில் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 15-ந்தேதி வரை ரேஷன்கடைகளில் குடிமைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து டெல்லி சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் தென்படவில்லை. தமிழ்நாடு மண்டல அளவில் மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சேலத்தை மையமாக கொண்டு தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்றவர்களில் வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தர்மபுரி மாவட்டத்திற்குள் வராமல் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் அறிகுறிகள், கொரோனா வைரஸ்பரவும் விதம், தடுப்பு முறை மற்றும் சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடைரவி, கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், தர்மபுரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிசாமி, ராமசாமி, துணை பதிவாளர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story