மாவட்டத்தில் 1,577 ரேஷன் கடைகளில், கொரோனா நிவாரணத்தொகை ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம் - கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு


மாவட்டத்தில் 1,577 ரேஷன் கடைகளில், கொரோனா நிவாரணத்தொகை ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம் - கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 April 2020 1:51 PM IST (Updated: 3 April 2020 1:51 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 1,577 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை ரூ.1,000 வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணத்தொகை ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் 1,577 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலமாக 9 லட்சத்து 76 ஆயிரத்து 623 குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமும் காலையில் 50 பேருக்கும், மாலையில் 50 பேருக்கும் என நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே இந்த நிவாரணத்தொகை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட உள்ளது. சேலம் மாநகரில் அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியது. அப்போது பொதுமக்கள் முக கவசங்களை அணிந்து ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரணத்தொகையை வாங்கிச்சென்றதை காண முடிந்தது.

பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் ஒரே இடத்தில் 3 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருவதால் அங்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஒருவருக்கு ஒருவர் சமுக இடைவெளியில் நின்று நிவாரணத்தொகையை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தினர்.

சேலம் பள்ளப்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணத்தொகை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கும் பணியையும் ஆய்வு செய்தார்.

டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 57 பேர் சேலம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்பதால் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் நிவாரணத்தொகை மற்றும் இதர ரேஷன் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கினர். சேலம் அம்மாபேட்டையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நிவாரணத்தொகை மற்றும் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு பொதுமக்கள் யாரும் உடனடியாக ரேஷன் கடைக்கு வரவேண்டாம் என்றும், அவர்களின் வீடுகளுக்கு ஊழியர்கள் நேரில் சென்று டோக்கன் வழங்குவார்கள் என்றும், அதன் பிறகு டோக்கன் பெற்றவர்கள் மட்டும் அவர்களுக்கு தெரிவித்த தேதி, நேரத்தில் கடைகளுக்கு வந்து நிவாரணத்தொகையை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story