அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் செய்த ஒப்பந்த தொழிலாளர்கள் 54 பேர் பணி நீக்கம் - கலெக்டர் அருண் நடவடிக்கை


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் செய்த ஒப்பந்த தொழிலாளர்கள் 54 பேர் பணி நீக்கம் - கலெக்டர் அருண் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 April 2020 2:06 PM IST (Updated: 3 April 2020 2:06 PM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சரியாக பணி செய்யாமல் போராட்டம் நடத்திய ஒப்பந்த தொழிலாளர்கள் 54 பேரை பணி நீக்கம் செய்து கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே இடத்தில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 750 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திடீர் போராட்டம் நடத்தினார்கள்.போலீசாரும், மருத்துவமனை நிர்வாகமும் போராட்டத்தை கைவிடும்படி அவர்களை எச்சரித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

இந்தநிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் அருண் நேற்று பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் அருணிடம் கேட்டபோது, ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கதிர்காமம் மருத்துவமனையில் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. பணிகளையும் ஒழுங்காக செய்வதில்லை என்பதால் அவர்கள் 54 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Next Story