ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அதிகாரிகள் கூட்டத்தில் நாராயணசாமி அறிவுறுத்தல்
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என்று அதிகாரிகள் கூட்டத்தில் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
வில்லியனூர்,
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் புதுவையிலும் பரவத் தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.மாநில அரசுகள் சிறப்பான நிர்வாகத்திறமையால் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.
இந்த நிலையில் நேற்று வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண், துணை கலெக்டர் சஸ்வத் சவுரவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொடர்பான விரிவான ஆலோசனைகள், அறிவுரைகள், மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை, மக்களிடம் தேவைப்படும் ஒத்துழைப்பு, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தெளிவாகவும், விரிவாகவும் நாராயணசாமி எடுத்துரைத்தார்.
கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி வருகிற வேளையில் மக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்க தனித்திருந்து, விழித்திருந்து அரசின் கோட்பாடுகளை கடைப்பிடித்து கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.இந்த தருணத்தில் அனைவரும் அரசின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட சுகாதாரத்துறை நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரசு நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். ஊரடங்கை அலட்சியம் செய்பவர்கள் மீதும், அரசு உத்தரவை மீறி வரும் பொழுதும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு சென்றபோது சிலர் ஒத்துழைக்காமல் மறுத்துள்ளனர். அதனை முதல்-அமைச்சர் கண்டித்தார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை கண்டு கொள்ளாத நிறுவனத்தின் மீது வருவாய் துறை சார்பில் துணை கலெக்டர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் உள்ளாட்சித் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பின்பற்ற மார்க்கெட் பகுதியை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த வைரசை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story