ஊரடங்கு உத்தரவு மீறல் 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்; 530 பேர் மீது வழக்கு - போலீசார் நடவடிக்கை


ஊரடங்கு உத்தரவு மீறல் 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்; 530 பேர் மீது வழக்கு - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 April 2020 2:35 PM IST (Updated: 3 April 2020 2:35 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றிதிரிந்ததாக 530 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2ஆயிரம் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவை மாநிலம் முழுவதும் போலீசார் பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க பல இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிகிறார்கள்.இதை தொடர்ந்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும், நூதன தண்டனை வழங்கியும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணமாக புதுவையில் மக்கள் வெளியில் நடமாடுவது ஓரளவு கட்டுக்குள் இருந்தது.

ஆனால் நேற்று சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அண்ணாசிலை, ராஜா தியேட்டர் சந்திப்பு ஆகிய இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பலர் தேவை இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுவது தெரியவந்தது. இதேபோல் இளம்பெண்கள் சிலரும் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவையின்றி வெளியில் சுற்றியதாக இதுவரை 530 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் 2000-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story