நெல்லையில் நடமாடும் காய்கறி கடை தொடக்கம்
நெல்லையில் நடமாடும் காய்கறி கடை நேற்று தொடங்கப்பட்டது.
நெல்லை,
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்கள் வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் ஏராளமானோர் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டில் குவிவதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பிரச்சினை எழுகிறது. இதை தவிர்க்க நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 14 இடங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவின் பேரில், ‘நெல்லை மாநகர பகுதியில் நடமாடும் காய்கறி கடைகள் நேற்று காலை தொடங்கப்பட்டது. அதை பாளையங்கோட்டையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, நெல்லை மாநகர பகுதியில் 35 நடமாடும் காய்கறி கடைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 6 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் வீதி, வீதியாக செல்லும். இந்த வாகனம் மூலம் வீட்டு முன்பே பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து இந்த நடமாடும் காய்கறி கடை வாகனம், நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது. பொதுமக்களும் ஆர்வமாக காய்கறிகளை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story