நெல்லை மேலப்பாளையத்தில் 400 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன


நெல்லை மேலப்பாளையத்தில் 400 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன
x
தினத்தந்தி 4 April 2020 4:15 AM IST (Updated: 4 April 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நெல்லை மேலப்பாளையத்தில் 400 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல்லை, 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநாட்டில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 16 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா வார்டில் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு அங்குள்ள தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த 16 பேரின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஊருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலப்பாளையம் போலீஸ் வலையத்துக்குள் வந்தது. ஊர் எல்லைகளை சுற்றி இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலப்பாளையம் பகுதியில் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இதுவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்களின் 400 வீடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வீடுகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அங்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் சதீஷ்குமார் வழிகாட்டுதலின்படி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் தலைமையிலான குழுவினர் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அனைத்து தெருக்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குப்பைகள் தேங்காமல் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி, துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு நிலவேம்பு கசாயம், கைகழுவும் சோப்பு ஆயில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள 11 வார்டுகளிலும் தூய்மை பணி நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் காலை 11 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலப்பாளையத்தில் உள்ள அம்மா உணவகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அங்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் மாலையில் உப்புமாவும் இலவசமாக வழங்கப்பட்டது.

Next Story