கிராமப்புறத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து உடுமலைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி மதுபாட்டில்கள்
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் பாதுகாப்பு கருதி உடுமலைக்கு கொண்டு வரப்பட்டு நகராட்சி திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. உடுமலை நகராட்சி பகுதியில் 8 டாஸ்மாக் கடைகளும், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் கிராமப்புறங்களில் 23 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அரசு உத்தரவுப்படி அடைக்கப்பட்டுள்ளன.
இதில் நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பான இடங்களில் உள்ளன. அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. அதனால் நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு அப்படியே உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் போதுமான பாதுகாப்பு இல்லாமல் உள்ளதாகக்கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் லாரிகள் மூலம் உடுமலை நகராட்சி திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.
நேற்று இரவு 7.30 மணி வரை 20 டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் அந்தந்த டாஸ்மாக் கடை பொறுப்பாளர்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதைக்கண்டறியும் வகையில் திருமண மண்டபத்தில் இடைவெளிவிட்டு தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. இன்னும் 3 கடைகளில் இருந்து மதுபாட்டில்களை கொண்டுவர வேண்டியுள்ளது.
இந்த 3 கடைகளில் இருந்தும் மதுபாட்டில்கள் வந்து சேர்ந்ததும், மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்படும். இந்த மண்டபத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கும். இந்த திருமண மண்டபத்திற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஹாலிலும், திருமண மண்டபத்தை சுற்றி நாலாபுறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story