சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்ய வேண்டாம்; தமிழர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
கொரோனா பீதியின் காரணமாக தமிழர்கள் சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்யாமல் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மும்பை,
கொரோனாவை தடுக்கும் வகையில் மராட்டியத்தில் கடந்த 22-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதில் சயான் கோலிவாடா பகுதியில் உள்ள பள்ளியில் உணவு தயார் செய்து தினமும் சுமார் 2 ஆயிரம் ஏழை எளிய மக்கள், நடைபாதை மக்கள், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் குடும்பத்தினர், வெளிமாநில தொழிலாளர்கள், மும்பையில் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
இதேபோல ரேசன் கார்டு இல்லாத வெளிமாநில ஏழை தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்கி உள்ளார்.
மேலும் இதுகுறித்து கேப்டன் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
சாங்கிலி, சத்தாரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் உணவு மற்றும் தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். எனது தொகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பீதி காரணமாக தமிழர்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். தற்போது அவர்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்து சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்ய வேண்டாம். தயவு செய்து வீட்டில் அல்லது எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளீ்ர்களோ அங்கு பாதுகாப்பாக இருங்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் வீட்டில் இருப்பது தான் பாதுகாப்பானது. உணவு, தங்கும் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்படும் தமிழர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story