மும்பை தாராவியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு


மும்பை தாராவியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 April 2020 4:57 AM IST (Updated: 4 April 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

மும்பை தாராவியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, 

நிதி தலைநகரான மும்பையை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. எனினும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியை கொரோனா தாக்காமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி தாராவியை சேர்ந்த துணிக்கடைக்காரருக்கு (வயது 56) கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மாலையே அவர் உயிரிழந்தார்.

இதேபோல நேற்று முன்தினம் தாராவியில் துப்புரவு வேலையில் ஈடுபட்ட மாநகராட்சி தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளி ஒர்லியை சேர்ந்தவர் ஆவார்.

டாக்டருக்கு கொரோனா

இந்தநிலையில் தாராவியை சோ்ந்த 35 வயது டாக்டருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் தாராவி மெயின்ரோட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். மேலும் பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பகுதி நேர டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் வசித்து வந்த கட்டிடத்தை மாநகராட்சி சீல் வைத்து உள்ளது. மேலும் கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளையும் கண்டறியும் பணி நடந்து வருகிறது.

தாராவியில் 3-வது நபர்

டாக்டருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் தாராவியில் 3-வது நபரை கொரோனா தாக்கி உள்ளது. இது தாராவி மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள தாராவியில் கொரோனா பரவலை மாநகராட்சி எப்படி தடுக்க போகிறது என்ற கேள்வியும் மக்கள் இடையே எழுந்து உள்ளது.

Next Story