கர்நாடகத்தில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - வியாபாரிகளுக்கு மந்திரிகள் எச்சரிக்கை
கர்நாடகத்தில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு மந்திரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் விலைைய வியாபாரிகள் கிடுகிடுவென உயர்த்திவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. .
இந்த நிலையில் நேற்று காலை மந்திரிகள் எஸ்.டி.சோமசேகர் (கூட்டுறவு), பி.சி.பட்டீல் (வேளாண்மை), கோபாலய்யா (உணவு மற்றும் பொதுவினியோகம்), நாராயணகவுடா (தோட்டக்கலை) ஆகியோர் பேட்ராயன புராவில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
சமூக விலகலை பின்பற்ற கோரிக்கை
அப்போது காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
அதே நேரத்தில் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக விலகலை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்லும்படி அவர்கள் கூறினர்.
இதைதொடர்ந்து மந்திரி நாராயணகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
மார்க்கெட்டுகளில் காய்கறிகளை வாங்க அதிகளவில் மக்கள் வருகிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு, வீடாக காய்கறிகள், பழங்களை தோட்டக்கலைத்துறை மூலமாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் காய்கறிகள், பழங்களை வாங்க மார்க்கெட்டுக்கு வருவது தவிர்க்கப்படும். இந்த திட்டம் பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) முதல் அமலுக்கு வந்துவிட்டது. மேலும் காய்கறிகள், பழங்களை கூடுதல் விலைக்கு விற்கும் கடைக்காரர்கள், வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி காய்கறிகள், பழங்களை கூடுதல் விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்யக் கூடாது. மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எக்காரணம் கொண்டும் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்க விற்க கூடாது. அதை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story