பலசரக்கு கடைகளில் பருப்பு தட்டுப்பாடு; லாரிகள் கிடைக்காததால் பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல்


பலசரக்கு கடைகளில் பருப்பு தட்டுப்பாடு; லாரிகள் கிடைக்காததால் பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல்
x
தினத்தந்தி 4 April 2020 3:45 AM IST (Updated: 4 April 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் பருப்பு வகைகள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், லாரிகள் கிடைக்காததால் வெளி மாவட்டங்களில் இருந்து மளிகை பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை, மருந்து கடைகள் உள்ளிட்டவை இயங்கி வருகிறது. தினந்தோறும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் ஏராளமான மளிகை கடைகள் உள்ளன. கடைகளில் மக்கள் கூட்டமாக நிற்பதை தடுக்கும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் வரிசையாக நிற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் போதிய சரக்குகள் இருப்பில் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட சில இடங்களில் பருப்பு வகைகள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காரைக்குடியில் பலசரக்கு கடை நடத்தி வரும் கேளின் கூறியதாவது:-

கடையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை இருப்பில் வைத்து அவற்றை கூட்டம் இல்லாமல் வினியோகம் செய்து வருகிறோம். மளிகை பொருட்களை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சரக்கு லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக சரக்கு லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சொந்த செலவில் இங்கிருந்து வாகனங்களை எடுத்து சென்று பொருட்களை வாங்கி வருகிறோம். இவ்வாறு வெளிமாவட்டங்களிலிருந்து பொருட்களை கொண்டு வர பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியது உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிங்கம்புணரியை சேர்ந்த மளிகை கடைக்காரர் தங்கராஜ் கூறும்போது, சிங்கம்புணரி பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பருப்பு வகைகள் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் மதுரையில் இருந்து சிங்கம்புணரிக்கு பருப்பு வகைகளை லாரிகள் மூலம் கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் காரைக்குடி உள்ளிட்ட பெரும் நகரங்களில் உள்ள கடைகளில் இருப்பு வைத்துள்ள பருப்புகளையும் அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறோம். இதனால் பொதுமக்களிடமும் அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு இருப்பு வைத்துள்ள பொருட்கள் அனைத்தும் விற்றுவிட்டால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். எனவே வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மளிகை பொருட்களை கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சிங்கம்புணரியில் பல்பொருள் அங்காடி நடத்தி வரும் சூர்யா கூறியதாவது:-

மளிகை பொருட்களை வாங்க மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட நரகங்களுக்கு சென்று வாடகை லாரி மூலம் சரக்குகளை ஏற்றி வருவது வழக்கம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மளிகை பொருட்களை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாடகை லாரிகளும் கிடைக்காததால் எங்களது சொந்த வாகனங்களை எடுத்துக்கொண்டு பொருட்களை ஏற்றி வருகிறோம். இதனால் குறைவான பொருட்களை மட்டுமே ஏற்றி வர முடிவதோடு போக்குவரத்து செலவும் அதிகமாகிறது. இதனால் பொருட்களின் விலையும் உயருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

சிவகங்கை நகரில் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செயல்படுகிறது. மளிகை பொருட்கள் தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினசரி இரவு நேரத்தில் மதுரையில் இருந்து லாரிகள் மூலம் தேவையான பலசரக்கு பொருட்கள் வழக்கம் போல் லாரிகளில் கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவுத்துறை மூலம் வேன்களில் காய்கறிகளை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து சரக்குளை கொள்முதல் செய்வதற்கு எந்தவித தடையும் இல்லை. மேலும் எந்த நேரத்திலும் சரக்குகள் கொண்டு வர அனுமதி பெற்றுச்செல்லலாம். பொதுமக்களுக்கு தடையின்றி மளிகை பொருட்களை விற்பனை செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story