கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக திருப்பூரில் தயாராகும் கவச உடை


கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக திருப்பூரில் தயாராகும் கவச உடை
x
தினத்தந்தி 3 April 2020 11:15 PM GMT (Updated: 4 April 2020 12:32 AM GMT)

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக கவச உடைகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர், 

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சுக்கும் நோய் தொற்று ஏற்படும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவ பணியாளர்கள் கவச உடை அணிந்துதான் கொரோனா நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதற்காக பிரத்யேகமாக கவச உடைகள் அதிக அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்து தற்போது கவச உடைகள் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தில் தற்போது கவச உடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதாவது கொரோனா வார்டில் அணியப்படும் கவச உடையின் பெயர் ‘கோவிட் 19 பாடி மாஸ்க் கோட்‘ ஆகும். முதல்கட்டமாக 10 ஆயிரம் கவச உடைகளை தயாரிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த முழு உடலுக்கான பிரத்யேக உடை தயாரிக்க தேவையான நான் ஓவன் பொருளை, புதுச்சேரியில் இருந்து ஜிப்மர் மருத்துவமனை அளித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு அனுமதி பெற்று கவச உடை தயாரிக்கும் பணியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் எஸ்.எஸ்.லோகநாதன் கூறியதாவது:-

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, பிரத்யேக உடை தயாரிக்கும் ஆர்டரை எங்களுக்கு வழங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக உடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். தற்போது மருத்துவ உலகுக்கு அவசரத் தேவையாக இந்த உடைகள் தேவைப்படுவதால், 10 ஆயிரம் உடைகள் கேட்டுள்ளனர். வழக்கமான உடை தயாரிப்பு போன்று தான் இந்த பணியும். ஆனால் வழங்கப்பட்டிருக்கும் நான் ஓவன் மெட்டீரியல், எந்திரத்தில் வெட்டும்போது எளிதில் சூடாகிவிடும். இதனால் அவை எளிதில் ஒட்டிக்கொள்ளும்.

எந்திரத்தில் வெட்டும்போது மிகுந்த கவனத்துடன் வெட்ட வேண்டி உள்ளது. தைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், தைக்கும் வளாகம் என அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணப்படுகிறது. மிகவும் மெலிதாக இருப்பதால், அழுத்தி தைத்தால் கிழிந்து விடும். பக்குவமாக கையாண்டு தைக்கிறோம். இதற்காக நாள்தோறும் 50 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு ஆயிரம் உடைகள் தைத்துக் கொண்டிருக்கிறோம். 10 நாட்களில் இந்த ஆர்டரை முடித்து விடுவோம்.

இதுபோல் தற்போது கூடுதலாக 30 ஆயிரம் உடைகளுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. இந்த முழுக்கவச உடைகள் தற்போது தயாரிக்கப்படும் மெட்டீரியல் சற்று வித்தியாசமானது. அதாவது வியர்வை மற்றும் ஈரத்தை உறியாத வகையில் இந்த 30 ஆயிரம் உடைகள் தயாரிக்கப்பட உள்ளது. வியர்வை மற்றும் ஈரத்தை உறியாத வகையில் இந்த உடைகள் தயாரிக்கப்படுவதன் மூலம் கிருமிகள் அதில் தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஈரப்பதம், வியர்வை இருப்பதை இந்த உடைகள் மூலம் உடனே கண்டுபிடிக்க முடியும்.

இதற்கான மூலப்பொருட்களையும் அந்த மருத்துவமனை அனுப்பியுள்ளது. அதனை வைத்து மாதிரி உடைகள் தயாரித்து அனுப்பியுள்ளோம். இதற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது கூடுதலாக 30 ஆயிரம் உடைகளுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. இந்த ஆர்டரையும் விரைவாக முடித்து கொடுத்து விடுவோம். இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story