டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் விழுப்புரத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா - கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கு தொற்று உறுதி


டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் விழுப்புரத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா - கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 April 2020 10:30 PM GMT (Updated: 4 April 2020 3:04 AM GMT)

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் விழுப்புரத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

டெல்லி நிஜாமுதீன் நகரில் கடந்த மாதம் நடந்த முஸ்லிம்கள் மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குழுவாக சென்றுள்ளனர். அந்த குழுவினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களில் பலரை கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 67 பேர் மாநாட்டில் கலந்துகொண்டது தெரிந்தது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து மருத்துவமனையில் சேர்ந்து, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் பலர் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மருத்துவமனைக்கு வராமல் இருந்தனர். அவர்களை போலீசாரின் உதவியுடன் தேடிப்பிடித்து மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் சேர்த்தனர்.

அதன்படி டெல்லி சென்று திரும்பிய 67 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வராமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று 20 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கிடைக்கப்பெற்றது. இதில் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், விக்கிரவாண்டியை சேர்ந்த ஒருவருக்கும், வளவனூரை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த வார்டில் அவர்கள் 6 பேரையும் தவிர வேறு யாரையும் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில டாக்டர்களும், செவிலியர்கள் மட்டுமே தனி வார்டுக்கு சென்று 6 பேரையும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேர், இவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேர் என மொத்தம் 7 பேரை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து, அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் 7 பேரையும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தி வைத்து டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். மேலும் அவர்களது ரத்த மாதிரி மற்றும் உமிழ்நீர் ஆகியவை பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 7 பேருடைய ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் சின்னசேலம், எலவனாசூர்கோட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்ற 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேரும், கள்ளக்குறிச்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேரும் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story