சேலத்தில் தங்கியிருந்து வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 258 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் - கலெக்டர் ராமன் வழங்கினார்
சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 258 பேருக்கு அரிசி, மளிகை பொருட்களை கலெக்டர் ராமன் வழங்கினார்.
சேலம்,
இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பெரியபுதூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் 258 பேர் வசித்து வருகின்றனர். இவர்களை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர்கள் சமைத்து சாப்பிடுவதற்காக அரிசி, கோதுமை, எண்ணெய் மற்றும் மளிகை பொருள்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இதையடுத்து கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளிமாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் வருவாய்த்துறை மூலம் உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் சமைத்து சாப்பிடும் வகையில் அரிசி, எண்ணெய், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதேபோல், மாவட்டத்தில் சுமார் 1,200 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் 6 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு சேலம் மாவட்டத்திற்கு திரும்பிய 33 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல் இந்தோனேசியா நாட்டில் இருந்து வந்த 11 முஸ்லிம் மதபோதகர்களுடன் தொடர்பில் இருந்ததாக மாநகரில் 136 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் உள்பட 1,400-க்கும் மேற்பட்டவர்களையும் கண்காணித்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மீறி வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story