பொதுமக்களை ஏற்றி சென்றால் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை


பொதுமக்களை ஏற்றி சென்றால் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 April 2020 9:26 AM IST (Updated: 4 April 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அனைத்து மத பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உணவுப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி பெற தேவையில்லை. அதேசமயம் அந்த வாகனங்கள் மீதும் அதில் பயணம் செய்யும் நபர்கள் மீதும் கிருமிநாசினி திரவம் அவசியம் தெளிக்க வேண்டும்.

அவசர மருத்துவ தேவைகள், திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு வெளியூர்களுக்கு செல்வது குறித்து ஆன்லைன் மூலம் http//dh-a-r-m-a-pu-ri.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அனுமதி சீட்டுகள் விண்ணப்பிப்பவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் வெளியிடங்களில் தேவை இல்லாமல் சுற்றி திரிந்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற இருந்த சந்தனக்கூடு திருவிழா மற்றும் தொழுகைகளை இஸ்லாமிய மதத்தலைவர்கள் தாமாக முன்வந்து தடை செய்துள்ளனர். பென்னாகரம் தாலுகா சிகரலஅள்ளி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த பலர் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பி உள்ளதால் இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

இந்த கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குனர் ஸ்டீபன்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story