நேர்மைக்கு இலக்கணமாக திகழும் மக்கள்: ஊழியர்கள் இல்லாத கடையில் ‘பிரட்’ விற்பனை அமோகம் - சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது


நேர்மைக்கு இலக்கணமாக திகழும் மக்கள்: ஊழியர்கள் இல்லாத கடையில் ‘பிரட்’ விற்பனை அமோகம் - சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது
x
தினத்தந்தி 3 April 2020 10:15 PM GMT (Updated: 4 April 2020 3:56 AM GMT)

கோவையில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் கடை முன்பு வைத்து ‘பிரட்’டு களை பொதுமக்கள் அதற்குரிய பணத்தை போட்டுவிட்டு எடுத்து செல்கிறார்கள். இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

கோவை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்றி, சமூகவிலகலை கடைபிடித்து வருகிறார்கள்.

கோவை ரத்தினபுரியில் உள்ள மேம்பாலம் அருகே இருக்கும் இனிப்புக்கடை ஒன்று ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த கடை நிர்வாகத்தினர், பொதுமக்களுக்கு ‘பிரட்’ கிடைப்பதற்காக தங்களது கடை முன்பு மேஜை ஒன்றில் ‘பிரட்’ பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் விற்பனை செய்ய ஆட்கள் யாரும் இல்லை.

அதற்கு பதில் ‘பிரட்’ வைத்துள்ள பெட்டியின் அருகில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். அதில், இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ‘பிரட்’ டின் விலை ரூ.30 ஆகும். தேவை யான அளவுக்கு ‘பிரட்’டு களை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த கடைக்கு வந்து அங்கு ‘பிரட்’டுகளை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால், அதைப்பார்த்த பல்வேறு தரப்பினர் நேர்மைக்கு இலக்கணமாக திகழும் கோவை மக்களுக்கும், கடை உரிமையாளரின் நம்பிக்கைக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Next Story