விற்பனை செய்ய முடியாததால் மரத்திலேயே அழுகும் பலாப்பழங்கள் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை


விற்பனை செய்ய முடியாததால் மரத்திலேயே அழுகும் பலாப்பழங்கள் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 April 2020 3:45 AM IST (Updated: 4 April 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக விற்பனை செய்ய முடியாததால் கீரமங்கலத்தை சுற்றியுள்ள பகுதியில் பலா மரங்களில் பலாப்பழங்கள் பழுத்து அழுகுகின்றன. அதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு, வடகாடு, அணவயல், நெடுவாசலை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் தோட்டங்கள், வீடுகளில் பலா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இங்கு விளையும் பலாப்பழங்கள் சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கும், தமிழ்நாட்டில் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 100 டன் வரை விற்பனைக்கு அனுப்பப்படும். கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பலா பழங்கள் என்றால் சுவை அதிகமாக இருக்கும் என்பதால் அனைத்து சந்தைகளிலும் தனி மதிப்புள்ளது.

அதேபோல நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவில் சித்திரை திருவிழாவில் கீரமங்கலம் பகுதி பலாப்பழங்கள் சுமார் 100 டன் வரை விற்பனை ஆகும். இந்த நிலையில் கஜா புயலில் பலா மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியது. எஞ்சி நின்ற மரங்களில் இந்த வருடம் ஓரளவு காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பலாப்பழங்களை பறித்து விற்பனை செய்ய முடியாமல் மரங்களிலேயே பழுத்து அழுகிக் கொண்டிருக்கிறன. ஏராளமான பழங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. 2 ஆண்டுகளுக்கு பிறகு பலா விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது ஊரடங்கால் பலாப்பழ விற்பனை ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலா விவசாயிகளின் வாழ்வாதாரம் முடங்கிப்போயிருக்கிறது. இதை சமாளிக்கும்வகையில் அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என பலா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story