திருப்பத்தூர் மாவட்டத்தில், 10 பேருக்கு கொரோனா பாதிப்பு - கலெக்டர் சிவன்அருள் தகவல்


திருப்பத்தூர் மாவட்டத்தில், 10 பேருக்கு கொரோனா பாதிப்பு - கலெக்டர் சிவன்அருள் தகவல்
x
தினத்தந்தி 4 April 2020 6:44 AM GMT (Updated: 4 April 2020 6:44 AM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவி ரூ.1000 மற்றும் பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள். இவர்களுடைய உறவினர்கள் மற்றும் யாரிடமெல்லாம் தொடர்பு வைத்திருந்தார்களோ அவர்களுக்கும் ரத்தபரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு ரஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்பட உள்ளது.

மற்றவர்களுக்கு டோக்கன் முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டோக்கன்கள் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள் அளிக்க உள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் சென்று வாங்கிக்கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும்.

ஆம்பூர், நாட்டறம்பள்ளி திருப்பத்தூர், வாணியம்பாடி, கந்திலி ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் இவை தொடர்ந்து செயல்படுத்தப்படும். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, 1,125 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

வாணியம்பாடி பெட்ரோல் பங்க்குகளில் சமூக விலகல் இன்றி பெட்ரோல் நிரப்பப் படுவதாக புகார் வந்துள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பேட்டியின்போது வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்திரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ், மருத்துவ அலுவலர் பசுபதி, வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story
  • chat