திருவாரூரில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு - நாகையில் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி


திருவாரூரில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு - நாகையில் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 April 2020 10:18 AM GMT (Updated: 4 April 2020 10:18 AM GMT)

திருவாரூரில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நாகையில் 5 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்,

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 44 பேர் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியது தெரிய வந்தது.

அவர்கள் 44 பேரும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 1-ந் தேதி 2 பேருக்கும், நேற்று முன்தினம் 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டிடம் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 19 பேர், இந்த சிறப்பு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் இருந்து டெல்லி சென்று திரும்பியவர்கள் 31 பேர் என கண்டறியப்பட்டு அவர்களுடைய ரத்த மாதிரி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் நாகை, நாகூர், பொரவச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று வேறு யாருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் வசித்து வந்த பகுதியில் வெளி ஆட்கள் நுழைய முடியாதபடி போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வேறு எங்கும் சென்றார்களா? அவர்களுடன் பழகியவர்கள் யார்? என்பதை அறிந்து அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாகை அருகே உள்ள பொரவச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரை நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா முகமது, இன்ஸ்பெக்டர் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

ஆனால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு வர மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அவர்கள் வர மறுத்ததால், அவர்களுக்கு வீட்டிலேயே ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்க டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டவரின் வீடு உள்ள பொரவச்சேரி பகுதி நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அந்த பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டன. பொரவச்சேரியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story