கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அரியாங்குப்பத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அரியாங்குப்பத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 April 2020 4:24 PM IST (Updated: 4 April 2020 4:24 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரியாங்குப்பம் பகுதியில் கலெக்டர் அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியாங்குப்பம்,

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவது நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு இந்த தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ரத்த பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து அரியாங்குப்பம் அருந்ததிபுரம், கோட்டைமேடு, சிவகாமி நகர், அம்பேத்கர் நகர், பி.சி.பி. நகர், கண்ணம்மா தோட்டம், சவுர்பர்ணிகா கார்டன் உள்ளிட்ட மேற்கு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் முதல் -அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார். தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, புதுச்சேரி கலெக்டர் அருண், போலீஸ் ஐ.ஜி.சுரேந்திர சிங் யாதவ் ஆகியோர் நேற்று அரியாங்குப்பம் பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சொர்ணா நகர் உள்ளிட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இணையதளம் மூலம் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தனர்.

மேலும் கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறுகையில், அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக வருவாய் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடந்து வருகிறது. இது தவிர டிரெய்ன்டு, டெஸ்ட், டிரேஸ், ட்ராக் மற்றும் டிரீட் எனும் 5டி கொள்கையை கடைபிடித்து வருகிறோம். எனவே புதுச்சேரியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார்.

அரியாங்குப்பம் தொகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்றும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் தாரணி மற்றும் பிரியங்கா ஆகியோரின் உத்தரவின் பேரில் செவிலியர்கள் கொண்ட குழுவினர் சிவகாமி நகர், பி.சி.பி. நகர் பகுதிகளில் வீடுகளில் உள்ள நபர்களின் கணக்கெடுப்பு விவரங்களை சேகரித்தனர்.

Next Story