கொரோனா தடுப்பு நடவடிக்கையில், அரசு துறைகள் இணைந்து செயல்படுகின்றன - ஜனாதிபதியிடம் கிரண்பெடி விளக்கம்


கொரோனா தடுப்பு நடவடிக்கையில், அரசு துறைகள் இணைந்து செயல்படுகின்றன - ஜனாதிபதியிடம் கிரண்பெடி விளக்கம்
x
தினத்தந்தி 4 April 2020 4:24 PM IST (Updated: 4 April 2020 4:24 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதுவை அரசு துறைகள் இணைந்து செயல்படுகிறது என ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் நடந்த காணொலி காட்சி கலந்துரையாடலின்போது கவர்னர் கிரண்பெடி விளக்கமளித்தார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் கவர்னர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலின் போது புதுவையில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பெடி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் அரசு துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மக்களிடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உபகரணங்கள் விரைவில் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.

பொதுமக்களுக்கு நிவாரண நிதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. எனவே வேறு வழிகளில் பணம் வழங்க தேவையில்லை. ஈரானில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து எந்த சரக்கும் இறக்கப்படாமல் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story